அங்கீகரிக்கப்பட்ட சில அமைப்புகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் சார்பிலும் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை காட்டிலும் அவர்களின் நடிப்பை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தரும் கைதட்டலே மிகப்பெரிய உயர்ந்த விருது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கூறியிருக்கின்றனர்.
எனினும் ஒரு கலைஞன் சிறந்த நடிப்பாற்றலை தனது ஆளுமையை திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெறும் அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சினிமா துறை சார்ந்த அமைப்புகள், பொது நிறுவனங்கள் அவர்களது திறமையை பாராட்டி ஊக்குவிக்கும் விருதுகளும் பாராட்டுகளும் இன்னும் அவர்களை உத்வேகப்படுத்துகின்றன என்றால் அது மிகையல்ல.
அந்த அடிப்படையில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் மற்றும் தமிழ் படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக ஒசாகா தமிழ் திரைப்பட விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த இயக்குனர் சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2023ம் ஆண்டுக்கான ஒசாகா திரைப்பட விருதுகள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அஜீத்குமாருக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் விஜய் நடித்த படத்திற்கும் 6 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான ஒசாகா சர்வதேச திரைப்பட விழா விருதுகள் விவரம் வருமாறு; சிறந்த படம் மாமன்னன், சிறந்த நடிகர் அஜீத்குமார் (துணிவு) சிறந்த நடிகை திரிஷா கிருஷ்ணன் (லியோ) சிறந்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா (லியோ) சிறந்த நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் (லியோ) சிறந்த எடிட்டர் பிலோமின் ராஜ் (லியோ) சிறந்த ஒலிக்கலவை – எஸ்ஒய்என்சி சினிமாஸ் (லியோ) சிறந்த சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் ( லியோ) என லியோ படம் 6 விருதுகளை பெற உள்ளது.
மேலும் சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் (விடுதலை 1) சிறந்த திரைக்கதையாசிரியர் நெல்சன் அல்பரட் பிரகாஷ் (ஜெயிலர்) விக்னேஷ் ராஜா (போர்தொழில்), சிறந்த தயாரிப்பாளர் – மில்லியன் டாலர் ஸ்டுடியோ, எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்ஸ் (குட் நைட்) சிறந்த துணை நடிகர் விக்ரம் (பொன்னியின் செல்வன் 2) சிறந்த துணை நடிகை ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் 2) சிறந்த என்டர்டெயினர் எஸ் ஜே சூர்யா (ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்) சிறந்த வில்லன் பகத் பாசில் (மாமன்னன்) சிறந்த கலை இயக்குனர் மிலன் பெர்னாண்டஸ் (துணிவு) விமர்சன ரீதியாக சிறந்த படம் – குட் நைட் என்று அந்த விருது பட்டியலில் வெளியாகி உள்ளது.





