2024 ஆம் ஆண்டு என்பது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சோதனை காலம் என்று தான் கூற வேண்டும். மற்ற ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகினாலும், அதனை மறைக்கும் விதமாக ஒரு மிகப்பெரிய வெற்றி ரசிகர்களை தேடி வந்துவிடும். அந்த திரைப்படத்தை பற்றிய பேச்சு கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்காவது இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை என்று தான் கூற வேண்டும். 2024-ல் தொடக்கத்திலேயே, சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றன. ரசிகர்களுக்கு சரியான பொங்கல் விருந்து என்று இந்த படங்களை கூற முடியாமல் போய்விட்டது.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் வெளியானது. இப்படி ஒரு படம் ரிலீசானதே இங்கு பாதி பேருக்கு தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. ஜெயிலர் என்னும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துவிட்டு ரஜினி நடித்த அடுத்த திரைப்படம், திரையரங்குகளில் காற்று வாங்கியது.
இதன் பிறகு பெரிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியாகாமல் இருந்ததால், ரி ரிலீஸ் திரைப்படங்களுக்கு கொஞ்ச நாள் மவுஸ் இருந்தது. உதாரணமாக கில்லி திரைப்படத்தை கூறலாம். ஏதோ இந்த திரைப்படத்தை முதலில் பார்ப்பது போல திரையரங்குகளில் ரசிகர்கள் முண்டியடித்தனர். எதிர்பார்ப்பிற்கு மேலே படத்திற்கு வரவேற்பு இருந்ததால், கில்லி இரண்டாவது ரவுண்டிலும் வசூலில் கல்லா கட்டியது.
இது நடுவே மலையாள திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மாறினர். மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, ஆவேசம் உள்ளிட்ட மலையாளத் திரைப்படங்கள் தமிழில் சக்கை போடு போட்டன. இதனைத் தொடர்ந்து அரண்மனை 4 மற்றும் மகாராஜா என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவின் மானத்தை காத்தன. ரசிகர்கள் இதற்கு சரியான வரவேற்பு கொடுத்ததால் இந்த திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் பணம் ஈட்டியது.
இந்த இரண்டு திரைப்படங்கள் போக வெறும் 6 திரைப்படங்களுக்கு தான் திரையரங்குகளில் ஓரளவு வரவேற்பு இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்தப் பட்டியலில், ப்ளூ ஸ்டார், கவின் நடித்த ஸ்டார், மணிகண்டனின் லவ்வர் ஆகிய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுபோக கருடன் திரைப்படமும் வசூல் ரீதியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் விஜய் ஆண்டனியின் ரோமியோ மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் பி டி சார் ஆகிய திரைப்படங்களும் லிஸ்ட்டில் வந்திருக்கின்றன. இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கே வியப்பை கொடுத்துள்ளது.





