தமிழ் சினிமாவின் உச்சந்தொட்ட கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் பி.வாசு. 1980களில் இருந்து எண்ணற்ற திரைப்படங்களை இயக்கி வரும் பி.வாசு, கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து “சந்திரமுகி” என்ற மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பி.வாசு “சந்திரமுகி 2” திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத், ஸ்ருஷ்டி தாங்கே உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரஜினிகாந்த் நடித்த “சந்திரமுகி” திரைப்படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு தயாரித்திருந்தார். ஆனால் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தை மிகப் பெரிய கார்ப்ரேட் நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேட்டி எடுத்த நிருபர், “சிவாஜி புரொடக்சன்ஸில் படம் இயக்கியதற்கும் தற்போது ஒரு கார்ப்ரேட் நிறுவனமான லைகா நிறுவனத்தில் படம் இயக்கியதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த பி.வாசு, “குடும்பம் என்ற விஷயம் மட்டும்தான் இல்லை. சிவாஜி புரொடக்சன்ஸ் என்றால் அது எனது குடும்பம், லைகாவுக்கு நான் ஒரு வேலைக்காரன். இவ்வளவுதான் வித்தியாசம். அதே நேரத்தில் லைகாவில் நான் ஒரு பொருள் வேண்டும் என கேட்டால் இரண்டு பொருளாக தருவார்கள். சிவாஜி புரொடக்சன்ஸில் பிரபு, உணவு விஷயத்தில் தாராளமாக இருப்பார். தனது தாயாரின் கையால் சமைத்து கொண்டு வருவார். அந்த பாசமும், அணைப்பும் லைகாவில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அது ஒரு கார்ப்ரேட்” என்று கூறியிருந்தார்.





