சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா என இரண்டு திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பா ரஞ்சித்திற்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் உண்டானது. இதனைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கியிருந்தார் ரஞ்சித். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
சொல்லப்போனால் ஆர்யாவுக்கும் இந்த திரைப்படம் திருப்பு முனையை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நட்சத்திரங்கள் நகர்கிறது என்னும் திரைப்படத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார். துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
பிறகு விக்ரமை வைத்து தங்கலான் படத்தை ரஞ்சித் இயக்கினார். மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. திரைக்கதை தொய்வாக இருந்ததாகவும், படத்தில் பேசும் வசனங்கள் ஒன்றுமே புரியவில்லை என்றும் பலரும் சலித்துக் கொண்டனர்.
விக்ரமிற்கும் இது சற்று அப்செட்டை கொடுத்தது. தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி அதில் ஒரு தரப்பு மக்கள் எந்த அளவு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை சொல்லி இருந்தார் ரஞ்சித். ஆனால் அது சரியாக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. இப்படியான சூழலில் ரஞ்சித் தனது அடுத்த திரைப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
வேட்டுவம் என இதற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வில்லனாக வருகிறார் ஆர்யா. தற்போது தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பகத் பாசிலும் நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் கதையை ரஞ்சித் கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாட்டிலேயே முதல் தலித் வீரர் என அறியப்பட்ட பல்வங்கர் பலூவின் கதையைத்தான் படமாக எடுக்க ரஞ்சித் திட்டமிட்டு உள்ளாராம். ஒரு புத்தகத்தை தழுவி இதனை படமாக எடுக்க ரஞ்சித்திற்கு அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





