இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்திலும் ஷாருக்கான் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினியுடன் மட்டும் நடிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நடிக்க வைக்க படத்தின் இயக்குனர் நெல்சன் முயற்சி செய்தார். அவர் நடிக்க மறுத்த நிலையில் பிறகு ஜாக்கி ஷெராப் நடித்தார். ஆனால் ஷாருக்கான் நடிக்க இருந்தது அந்த கேரக்டர் அல்ல.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் நடிகர் ஷாருக்கானை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அப்போதும் முதலில் ஓகே சொன்ன ஷாருக்கான் பிறகு சில காரணங்களை கூறி தவிர்த்து விட்டார். அதன்பிறகு தான் அந்த கேரக்டரில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்தார்.
கூலி படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள், நல்ல வேளை ஷாருக்கான் நல்ல முடிவு எடுத்தார். அமீர்கான் போல கடைசி காட்சியில் வந்து பீடி குடித்து விட்டு செல்லாமல் இந்த படத்தில் இருந்து நைசாக விலகி தனது இமேஜை காப்பாற்றிக் கொண்டார் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி கலாய்த்தனர்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியானது. அவரும் ரஜினியும் நடிக்கும் முக்கிய காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதுவும் இல்லை. ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டிய அதே கேரக்டரில் ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் மாஸ் ஹீரோவாக உள்ள அவர், தெலுங்கில் அவர் சமீபத்தில் நடித்த 3 படங்கள் தொடர்ந்து பிளாப் ஆன நிலையில் ரஜினி படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.





