தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார் வரிசையில் விஜயகாந்த் ஒருவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர். 180 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்த முக்கிய நடிகர். குறிப்பாக தேமுதிக என்ற கட்சியின் தலைவர். 2011ல் சட்டசபை எதிர்கட்சி தலைவராக இருந்தவர்.
இதையெல்லாம் கடந்து மனிதநேயம் மிக்க சிறந்த மனிதர். எது சரியோ அதை தயங்காமல் செய்பவர். அவரது துணிச்சலும், தைரியமும் எந்த நடிகரிடமும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. சினிமாவில் வீரம் காட்டும் நடிகர்கள், நேரில் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். பிரஸ்மீட்டில் எதையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆனால் கேப்டன் எதற்கும் பயப்படாமல் பேசுபவர்.
ஒரு நடிகராக, கட்சியின் தலைவராக மட்டுமே இல்லாமல் சக மனிதராக, நம்முடன் வாழ்ந்த ஒரு பண்புமிக்க மனிதராக அவரை போற்றுவோர் காரணமாக தான் இன்று மாலை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவரது கடைசி நிமிடங்களை கண்ணீர் மல்க வழிநெடுக பார்த்து நின்றனர். பலரும் மனம் பொறுக்க முடியாமல் கதறி கதறி அழுது தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதில் நடிகர் விஜய், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வருவாரா, மாட்டாரா, விஜயகாந்த் உடல்நலம் இல்லாமல் இருந்த போது ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லையே, செந்தூரப்பாண்டியில் விஜயை தம்பியாக நடிக்க வைத்த நன்றிக்கடன் இல்லாமல் நடந்து கொள்கிறாரே என விமர்சிக்கப்பட்டார். எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா். கண்ணீர் சிந்தி அழுதார்.
ஆனால் நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருக்கிறார். அவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், அவர் இறுதி வரை வரவே இல்லை. சினிமா பிரமோ நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், சினிமா சாராத பொது நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துக்கொள்வது இல்லை என்ற அஜீத்குமார் கொள்கை சரியானதாக இருக்கலாம்.
ஆனால் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தமிழக அளவில் ஒரு முக்கிய கட்சியின் தலைவர், சிறந்த பண்பாளர் என்ற அடிப்படையில் விஜயகாந்த் என்ற அந்த உயர்ந்த மனிதரின் உடலுக்கு நேரில் வந்து தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கலாம். துபாயில் இருந்து வர முடியாவிட்டாலும், ஒரு நான்குவரியில் ஒரு இரங்கல் தெரிவித்து இருக்கலாம். இப்படி ஒரு பண்பற்ற முறையில் அஜீத்குமார் நடந்துக் கொண்டது அவரது ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.





