- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதலை கொண்டாடும் காதலர்களே… இந்த படத்தை அவசியம் பாருங்க… - பரிந்துரை செய்த கவிஞர் வைரமுத்து!

காதலை கொண்டாடும் காதலர்களே… இந்த படத்தை அவசியம் பாருங்க… – பரிந்துரை செய்த கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

உலகம் முழுவதும் வரும் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த காதலை மையமாகக் கொண்ட திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி 7.3 ரேட்டிங் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு அதிக அளவில் ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் காதலை கொண்டாடும் காதலர்கள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்கிற ஒரு மறைமுக அறிவுறுத்தலை வைரமுத்து அன்பாக செய்திருக்கிறார்.

- Advertisement -

தனது எக்ஸ் தள பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, ஒரு படம் பார்த்தேன். கொரியப் படம். Even if this Love Disappears tonight என்பது படத்தின் தலைப்பு. இன்றிரவே இந்தக் காதல் மறைந்து படுமாயினும் என்று அந்த தலைப்பை தமிழ்ப்படுத்தலாம்.

சிறு கரு. பள்ளிக் காதலர் இருவர் வெண்பனியில் குளித்து வெள்ளை மேகத்தில் துவட்டி வைத்த வெண்மலர்கள். விபத்தில் அவளுக்கொரு நோய். நேற்று நடந்தது விடிந்தால் தெரியாது. அவள் நினைவின் நீளம் அன்று மட்டும்தான். இப்படி ஒரு கரு கிடைத்தால் நம்மூரில் திரைக்கதை என்ற பெயரில் வந்தவன் போனவன் எல்லாம் வைக்கோல் திணித்திருப்பான்.

- Advertisement -

ஆனால், எந்தவொரு செயற்கை சில்மிஷமும் இல்லாமல் இலையில் நகரும் நீர்த்துளி போல இயல்பாய் அசைகிறது கதை. எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இத்துனூண்டு கவிதையை ரசிக்கும் இதயங்களுக்கு இது பிடிக்கும்.

இதோ எனது அதிகாலை காஃபியின் நுரைகளில் நேற்றிரவு பார்த்த நிலா முகங்கள் நொறுங்கும் பிம்பங்களாய்… என கவிஞர் வைரமுத்து அதில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் வெளியான படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்