பணிநிரந்தம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில் செவிலியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்னம் மைதானம் அருகே கூடி போராட்டம் நடத்தினர்.
அப்போது அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலகத்துக்கு சென்ற 5 செவிலியர் பிரதிநிதிகள் அங்கு கைது செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செவிலியர்கள் செல்ல மறுத்து அந்த பகுதியில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்ட நிலையில் நள்ளிரளவில் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்த நேரத்தில் போலீசார் அங்கு தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த செவிலியர்கள் மட்டுமின்றி அங்கு இருந்த அவர்களது குழந்தைகளும் தாக்கப்பட்டுள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, பெண்கள் மீது சிறு கீறல் கூட விழுந்தால் கூட பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அன்று பஞ்ச் டயலாக் பேசியவர் விஜய். இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு. குழந்தைகளை தாக்குவதற்கு பெயர் என்ன தாய் மாமன் தடியடி சட்டமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது காவல்துறை அரங்கேற்றிய அராஜகம் கொடூரத்தின் உச்சம். பாசிசம் பாயாசம் என்று ரைமிங் வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த ரீல்ஸ் முதலமைச்சர் ஜஸ்டிபை செய்வார் என்று கேட்டுள்ளார்.
செவிலியர்கள் தாக்கப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை போலீசார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுவது நீதி அல்ல என்று அவர் கூறியிருக்கிறார். தவெக அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.





