தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் சரியாக போகாததால் பிறகு இந்தி தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இப்போது தமிழில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது 2வது சுற்றை ஆரம்பித்த நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். கூலி படத்திலும் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள அவர், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் சூர்யா பூஜா ஹெக்டே ஜோஜூ ஜார்ஜ் ஜெயராம் நாசர் பிரகாஷ்ராஜ் சுஜித் சங்கர் சுவாசிகா சிங்கம்புலி நந்திதா தாஸ் கருணாகரன் ஜார்ஜ் மரியான் ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் மே 1ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் ரெட்ரோ பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது, தமிழ் சினிமாவில் தான் நான் முதலில் அறிமுகமானேன். ரெட்ரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் இயக்குனருக்கு நன்றி. ரெட்ரோ படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவியை இயக்குனர் குழுவினருக்கும் நன்றி.
ரெட்ரோ படத்தில் ருக்மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு கேரக்டரை வடிவமைத்ததற்கும் அதில் நடிப்பதற்கும் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கும் இயக்குனருக்கு நன்றி சொல்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதி அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு தாருங்கள்.
சூர்யா இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸ்சிவ் ஆன கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கனிமா பாடலை ரீல்ஸ் ஆக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என்று அந்த விழாவில் நடிகை பூஜா ஹெக்டே பேசியிருக்கிறார்.





