தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிரபாஸ், அந்தத் திரையுலகை தாண்டி இந்திய திரையுலகம் அளவுக்கு பலரும் தெரியும் வகையில் பிரபலமாக இருக்கிறார். இதற்கு மிக முக்கிய காரணம் பாகுபலி எனும் திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு முன்னதாகவே தெலுங்கில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் அறியப்படும் வகையில் அவர் வளர்ந்தது பாகுபலி திரைப்படத்தில் நடித்ததால் தான்.
ராஜமவுலி இயக்கி இருந்த இந்த திரைப்படம், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. சாதாரண ஒரு பழிவாங்கல் கதையை, தன்னால் முடிந்த அளவுக்கு எவ்வளவு சுவாரசியமாக கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்து கச்சிதமாக திரைக்கதையை அமைத்திருந்தார் ராஜமவுலி. இதன் காரணமாக இதன் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தன.
ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸின் தேர்வு அந்தளவுக்கு சரியாக இல்லை என்றுதான் கூற வேண்டும். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு சாகோ என்னும் திரைப்படத்தில் நடித்தார் பிரபாஸ். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. அதீத பொருட் செலவில் எடுக்கப்பட்டாலும் திரைக்கதையில் போதிய கவனத்தை செலுத்தாததே இதற்கு காரணம் என்று பலரும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்தார் பிரபாஸ். காதல் திரைப்படமாக இது உருவானது. இதற்காக வெளிநாடுகளில் சூட்டிங் எடுத்தார்கள். ஆனால் இதுவும் பிரபாஸுக்கு எந்த ஒரு வகையிலும் கை கொடுக்கவில்லை. பிறகு ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. ராமாயணம் திரைக்கதையை தழுவி அனிமேஷனில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
கோடிக்கணக்கில் இந்த திரைப்படத்திற்கான முதலீட்டை போட்டு படத்தை எடுக்க, அதுவும் சரியாக அமையாமல் தோல்வியை தழுவியது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் உடன், பிரபாஸ் பணியாற்றிய சலார் திரைப்படம் மட்டும் ஓரளவு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கல்கி திரைப்படத்திலும் நடித்த பிரபாஸ் தற்போது ராஜா ஷாப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
ஹாரர் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்திற்கு பௌசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குனர், ஹனு ராகவாபுடி இதனை இயக்குகிறார். ராணுவ பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





