கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வர திட்டமிட்ட படம்தான் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம். ஆனால் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனதால், டிராகன் படம் ஒரு வாரம் கழித்து கடந்த 21ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தல வந்தா தள்ளிப் போய்த்தானே ஆகணும் என்று பிரதீப் ரங்கநாதனே டிராகன் படம் ரிலீஸ் தேதி தள்ளி வைத்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இப்படிதான் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இப்போது 3 நாட்களாக டிராகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் அபரிமிதமான வரவேற்பை ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, நல்ல வேளையாக விடாமுயற்சி படம் ரிலீஸான போது டிராகன் படம் ரிலீஸாகி இருந்தால், வசூலில் இன்னும் மிக மோசமான நிலைக்கு விடாமுயற்சி படம் போயிருக்கும் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் உருவான டிராகன் படத்துக்கு அபரிமிதமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் அந்தந்த கேரக்டர்களில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பு படத்தை அப்படியே தூக்கி நிறுத்துகிறது.
குறிப்பாக படம் முழுவதும் தன் அழுத்தமான அட்டகாசமான நடிப்பால் மிக சிறப்பாக படத்தை கொண்டு செல்பவர் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன்தான். ஆனால் அதே அளவுக்கு கல்லூரி முதல்வர் மிஷ்கின், பிரதீப் பணி செய்யும் நிறுவனத்தின் அதிகாரி கௌதம் மேனன் போன்றவர்களின் தனித்துவமான நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
படத்தில் கயாடு லோஹர் அனுபமா பரமேஸ்வரன் பிஎல் தேனப்பன் கேஎஸ் ரவிக்குமார் ஆர்ஜே ஜித்து மரியம் ஜார்ஜ் இந்துமதி என யாருடைய கேரக்டரை பார்த்தாலும் அதில் அவர்கள் வாழ்ந்திருப்பதை ரசிகர்களுக்கு உணர்த்துகின்றனர். கடைசி வரை போலித்தனமாக நடந்துக்கொண்டு ஏமாற்றும் பேர்வழியாக உள்ள கதாநாயகன், இறுதியில் தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தி நேர்மை மிக்கவனாக மாறுவதே படத்தின் கதை.
எப்பவுமே கதை தான் ஹீரோ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறது டிராகன் படம். ஸ்டார் வேல்யூ பிரமாண்டம் பில்டப் கமர்ஷியல் என்ற பெயரில் திரையில் குப்பைகளை கொட்டிக் காட்டி ரசிகர்களை மூடு அவுட் செய்யும் இயக்குனர்கள், இனியாவது டிராகன் போன்ற படங்களை பார்த்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நல்ல படங்களை தொடர்ந்து ஜெயிக்க வைத்து மோசமான படங்களுக்கு குட் பை சொல்லி ரசிகர்களே அதை சிறப்பாக செய்து விடுவார்கள் என்பதும் நாளடைவில் சாத்தியமாகி விடும்.





