நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 தினங்களுக்கு முன் வெளிவந்த படம் அயலான். பொங்கல் பண்டிகைக்காக கேப்டன் மில்லர், மிஷன், மெரி கிறிஸ்துமஸ் என மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் அயலான், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் இதில் நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. வந்த படங்களில் இந்த படங்கள் பார்க்க நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் லால் சலாம், அரண்மனை 4 படங்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தை பொருத்தவரை மேக்கிங் மிகப்பெரிய அளவில் சிறப்பாக இருப்பதாக பாராட்டப்பட்டாலும், படத்தின் கதை என்பது மிகவும் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. படம் முழுக்க வன்முறை காட்சிகள் மிக மிக அதிகம் என்பதால், குடும்பத்துடன் பார்க்க இது தகுதியற்ற படம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதே வேளையில், அருண் குமார் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் வந்துள்ள மிஷன் சாப்டர் 1 படம், நன்றாக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படும் நிலையில், அந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், இந்த படம் பல ஊர்களில், பல தியேட்டர்களில் ஓடவில்லை. சில தியேட்டர்களில் காலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே உள்ளன. பகல் காட்சி, முதல் காட்சி இல்லை.
அயலான் படத்தை பொருத்தவரை இதுவரை 30 கோடி ரூபாய் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் வசூல் நடந்துள்ளது. இது பண்டிகை கால வசூலாக இருப்பதால், வரும் நாட்களில் இதே அளவு கணிசமான வசூல் நீடிக்குமா, அல்லது சரசர என குறைந்து போய்விடுமா, என்பதிலும் தயாரிப்பாளர்களுக்கு தவிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அயலான் படக்குழு சார்பில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், டைரக்டர் ரவிக்குமார் மற்றும் படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள், படக்குழுவினர் என ஊர் ஊராக, தியேட்டர் தியேட்டராக சென்று, ரசிகர்களை சந்திக்க உள்ளனர். இது படத்தை பிரமோ செய்யும் ஒரு முயற்சியாக, இயன்றவரை லாபம் கிடைக்கட்டும் என்ற நிலையில், இந்த பிளான் செயல்படுத்தப்படுகிறது. நேற்று கோவை மற்றும் திருப்பூரில் அயலான் திரையிட்ட தியேட்டர்களில் படம் பார்க்க வந்த ரசிகர்களை சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு சந்தித்து இருக்கிறது. தொடர்ந்து மற்ற ஊர்களுக்கும் செல்கின்றனர்.





