தனது அசத்தலான நடனத்தால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா. பிறகு 1994ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படம் மூலம் நடிகராகவும் பிரபுதேவா மாறினார். பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபுதேவா பிறகு விஜய் நடித்த போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கி இயக்குனராகவும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன், நடிகர் வடிவேலு இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. அதுவும் நடிகர் வடிவேலு சினிமாவில் வளரத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் பிரபுதேவாவுடன் அவர் நடித்த படங்கள் காமெடியில் மாஸ்ஹிட் படங்களாக இருந்து வடிவேலுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
குறிப்பாக நடிகர்கள் பிரபுதேவா வடிவேலு இணைந்து நடித்த காதலன் லவ் பேர்ட்ஸ் மிஸ்டர் ரோமியோ காதலா காதலா மனதை திருடிவிட்டாய் எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் பிரபுதேவா வடிவேலு காம்போ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் மனதை திருடிவிட்டாய் படம் கடந்த 2001ம் ஆண்டில் வெளியானது.
இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, வடிவேலு கல்லூரி மாணவர்களாக நடித்திருந்தனர். இதில் துபாயில் 20 பெட்ரோல் கிணறு இருப்பதாக காதலியிடம் பொய் பேசி காதலிக்கும் வடிவேலு, தெருக்கூத்தாடும் அவரது குடும்பம், ஒய் பிளட் ஷேம் பிளட் என பிரபுதேவாவிடம் பேசும் வடிவேல் காமெடி காட்சிகள் வேற லெவலில் இருக்கும். மனதை திருடி விட்டாய் படத்தில் அவர்களது காமெடி காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதில் வரும் காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தில் வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து நடித்திருந்தனர். அதற்குப் பிறகு இருவரும் 21 ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை. சமீபத்தில் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான பஹிரா படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் நடிகர் விஜயுடன் தி கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபுதேவா நடித்திருந்தார்.
மாமன்னன் கேங்ஸ்டர் படங்களை தொடர்ந்து மாரீசன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவாவும் வடிவேலும் இணைந்து நடிக்கின்றனர். கேஆர்ஜி குரூப்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். படத்தின் துவக்க விழா பூஜை இன்று துபாயில் நடைபெற்றது. நடிகர்கள் பிரபுதேவா வடிவேலு உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.





