தமிழ் சினிமாவின் தற்போது முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரது திரைப்படங்களுக்கு என இங்கு தனி மார்க்கெட் உள்ளது. இதனால் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக அவர் உருவெடுத்து இருக்கிறார். அவர் இயக்கிய திரைப்படமும், இயக்கி நடித்த திரைப்படமும் வாகை சூடி இருக்கிறது.
கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அடுத்ததாக, லவ் டுடே திரைப்படத்தில் இயக்கி நடித்திருந்தார். தற்போது, அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் முதல் முயற்சியே, பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுத்திருக்கிறது. அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்த டிராகன் திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது.
இதனைத் தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ஏற்கனவே இவர் டிராகன் திரைப்படத்திற்கு முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதாவது எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் தலைப்பு எல்ஐகே என மாற்றப்பட்டது.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். முக்கியமாக ஹீரோவுக்கு தந்தையாக சீமான் நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா வுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காதல் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் டைம் டிராவல் முறையை விக்னேஷ் சிவன் கையில் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
செவன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்படியான சூழலில், தீபாவளி பண்டிகைக்கு எல்ஐகே திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். வரும் 27ஆம் தேதி படத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதீப்பின் மற்றொரு திரைப்படமான டியூட் தள்ளிப் போவதாக சொல்லப்பட்டது.
ஆனால் அது ஒன்றும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், டியூட் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக மீண்டும் ஒரு போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ். சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கலந்த காமெடி திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் சரத்குமாரும் இருக்கிறார். மமீதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரே நாளில் பிரதிப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டியூட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





