பிரதீப் ரங்கநாதனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. தனது முதல் திரைப்படமான கோமாளியில், ஒரு சிறிய கேமியோ ரோலில் மட்டும் அவர் வந்திருப்பார். பிறகு லவ் டுடே திரைப்படத்தை அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இப்படியான சூழலில்தான் பிரதீப் ரங்கநாதனுக்கு மூன்றாவது திரைப்படமாக வெளியானது டிராகன்.
ஏற்கனவே ஓ மை கடவுளே எனும் காதல் கலந்த ஃபேண்டஸி திரைப்படத்தைக் கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. அவரின் இரண்டாவது திரைப்படம் ஆக தான் வெளியானது டிராகன். யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது.
இந்த நவீன யுகத்தில் இளைஞர்களுக்கு கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான திரைப்படமாக கொடுத்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக டியூட் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். சுதா கொங்கராவிடம் அசிஸ்டெண்டாக இருந்த கீர்த்தீஸ்வரன் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மலையாள நடிகை மமீதா பைஜூ இதில் கதாநாயகியாக வருகிறார். சாய் அபயங்கர் இசையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஊறும் பிளட் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு பாடல்கள் இதிலிருந்து வெளியாகின. தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன் பிரதீப் ரங்கநாதன் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல் ஐ கே திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி அன்று பிரதீப் ரங்கநாதனுக்கு இரு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறினர். இப்படியான சூழலில் தனது முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறது விக்னேஷ் சிவன் படக் குழு. அதன்படி எல்ஐகே திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.





