ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். தொய்வான திரைக்கதை மற்றும் லாஜிக் மீறலால் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.
இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் ஓரளவு லாபத்தை கொடுத்ததாகவே சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதன் நடுவே தற்போது இமயமலைக்கு ரஜினிகாந்த் பயணித்துள்ளார்.
இதேபோல் கமல்ஹாசனும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் அடுத்ததாக, சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக வெளிநாடுகளில் மூவரும் சேர்ந்து படத்தின் தொழில்நுட்பம் குறித்து பேசி வந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனை கமல்ஹாசனே உறுதிப்படுத்தி இருந்தார். நாங்கள் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போகிறோம் என்றும், இது எப்போதோ நடந்திருக்க வேண்டியது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக பலரும் கூறினார்கள்.
கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை லோகேஷ் கனகராஜ் ஒத்தி வைத்துவிட்டு இதில் கவனம் செலுத்த போக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அண்மையில் செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லி இருந்தார். அப்படி இருக்கும்போதே லோகேஷ் அந்த திரைப்படத்தில் இருப்பது சந்தேகம்தான் என்று பலரும் கூறினார்கள். அதுமட்டுமல்ல இருவரையும் சேர்த்து படத்தை இயக்கப் போவது யார் என்ற பட்டியலும் நீண்டு கொண்டே சென்றது.
இப்படியான சூழலில் அண்மையில் பேட்டியளித்த பிரதீப் ரங்கநாதனிடம் இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தை நான் இயக்கவில்லை. என்னுடைய கவனம் எல்லாம் தற்போது நடிப்பில் மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்தார். உங்களுக்கு படத்தை இயக்க அழைப்பு ஏதும் வந்ததா என்று கேட்ட கேள்விக்கு தன்னால் இப்போது பதில் கூற முடியாது என்றும் சொல்லிவிட்டார். இதன் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு ரஜினி கமல்ஹாசன் திரைப்படத்தை இயக்க அழைப்பு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.





