போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இதில் நானும் ரவுடிதான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை இயக்கிய போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்து பிறகு கல்யாணத்தில் முடிந்தது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். லைக்கா நிறுவனம் இதனை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார். அதன்பிறகு மகிழ்திருமேனிக்கு அந்த வாய்ப்பு சென்றது.
இப்படியாகத்தான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில், தனது எல்ஐசி திரைப்படத்தை எடுக்கச் சென்றார் விக்னேஷ் சிவன். முதலில் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால் சீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக, அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதன் உள்ளே வந்தார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதைத்தான் சுருக்கி எல்ஐசி என்று படத்திற்கு டைட்டில் வைத்தார்கள். ஆனால் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், படத்தின் டைட்டில் எல்ஐகே என்று மாற்றப்பட்டது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இதனை தயாரித்து வருகிறது. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும், எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் வருகின்றனர். மிக முக்கியமாக பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக சீமான் நடித்திருக்கிறார். டைம் டிராவலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் அண்மையில் இதற்கான படப்பிடிப்பு தடைபட்டது.
தொடர்ந்து டிராகன் படம் ரிலீஸ் ஆன நிலையில், மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஷூட்டிங்கிற்கு புறப்பட்டார் விக்னேஷ் சிவன். அதன்படி மலேசியாவில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.





