மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம், முதல் நாளில் மட்டும் 148 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர்ந்து திரைப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பதாலும், வரும் நாட்கள் விடுமுறை தினம் என்பதாலும் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். வழக்கம்போல அன்பறிவ் மாஸ்டர்கள்தான் இதற்கும் சண்டை பயிற்சியாளராக வேலை செய்ய உள்ளனர். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 திரைப்படத்திற்கான கதையை மாநகரம் திரைப்படத்திற்கு முன்பாகவே எழுதி விட்டேன்.
இதில் எனக்கு நெருக்கமான ஒரு நடிகரை நடிக்க வைக்கதான் திட்டமிட்டு இருந்தேன். இது குறித்த கதையை ரஜினிகாந்த் சாரிடம் சொல்லும்போது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சமீபத்தில் எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தூள் கிளப்பலாம் கண்ணா என்று கூறினார். தலைவர் 171-க்கான ஒன்லைனை விஜய்யிடம் கூறும் போதும் அவரும் பாராட்டினார்.
லியோ படத்தைப் போல சூட்டிங் செல்வதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்தியை இந்த முறை அறிவிக்கப்போவதில்லை. கதை எழுதவே நேரம் எடுத்துக் கொள்ள இருப்பதால், அடுத்த மார்ச் மாதத்தில்தான் சூட்டிங்கை தொடங்க இருக்கிறோம் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர், தனது உதவி இயக்குனருடன் இணைந்து கதையை எழுதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக, மலையாள நடிகர் பிரிதிவிராஜை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் குறித்த தேர்விலும் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். இதனால், தலைவர் 171க்கான அப்டேட்டுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





