ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் அட்லி. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்த அட்லி இயக்கிய முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். ஆர்யா, நயன்தரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யன் சத்யராஜ் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து விஜய் நடித்த தெறி, பிகில், மெர்சல் ஆகிய 3 படங்களை இயக்கினார் அட்லி. இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. குறிப்பாக தெறி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், பிகில் படத்தில் கால்பந்தாட்ட கோச் ஆகவும், மெர்சல் படத்தில் டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என்ற வித்யாசமான கெட்டப்புகளில் அசத்தியிருப்பார் விஜய்.
இந்த 3 வெற்றிப் படங்களை தந்த அட்லி, அடுத்து இந்தி படவுலகம் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியங்கா சோப்ரா, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்த நிலையில் இந்த படம் 1200 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது.
இதையடுத்து ஷாருக்கான் நடிக்கும் படம், கமல்ஹாசன் நடிக்கும் படம், விஜய் நடிக்கும் படம் என அட்லி படம் இயக்க போவதாக நிறைய தகவல்கள் பரவின. ஆனால் எந்த படத்திலும் இதுவரை அட்லி கமிட் ஆகவில்லை. அட்லி இயக்கத்தில் எந்த நடிகரும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை. ஆனால் விஜயின் கடைசி படத்தை அட்லிதான் இயக்குவார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் உண்மையில் இந்த தகவல் எல்லாமே ஆதாரமற்ற தகவல்களாக இருக்கின்றன.மும்பையில் ரூ. 40 கோடியில் அலுவலகம் திறந்துள்ள அட்லி, இதுவரை விஜய், கமல், ஷாருக்கான் என யாருக்காகவும் கதை எழுதவில்லை. ஸ்கிரிப் எழுதும் பணியிலும் அவர் ஈடுபடவில்லை.
அட்லி அடுத்து தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜூனை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தெலுங்கு படங்களை தயாரிக்கும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. பான் இந்தியா படமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். புஷ்பா 2 படப்பிடிப்பை முடித்த பின், அட்லி டைரக்ஷனில் அல்லு அர்ஜூனா நடிக்க இருப்பதே உண்மையான தகவல் என்று தெரிய வந்துள்ளது.





