ரெட்ரோ படத்தை தொடர்ந்து அடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். சூர்யா வக்கீலாக ஒரு கேரக்டரிலும் கருப்பண்ணசாமியாக ஒரு கேரக்டரிலும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மௌனம் பேசியதே ஆறு படங்களை தொடர்ந்து நடிகை திரிஷா இந்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் சூர்யாவுக்கு பெரிய அளவில் கொண்டாடப்படும் விதமான மாஸ் ஹிட் படங்கள் எதுவுமே அமையவில்லை, ஜெய் பீம் சூரரைப் போற்று என 2 படங்கள் மட்டுமே ஓடிடியில் நேரடியாக வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற நிலையில், 10க்கும் மேற்பட்ட சூர்யாவின் படங்கள் பலத்த தோல்வியை சந்தித்த படங்களாக இருந்தன.
கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படமும் நடிகர் சூர்யாவுக்கு வணிக ரீதியான வெற்றியை தந்தாலும் அவரது நடிப்பை கொண்டாடும் ஒரு படமாக அமையவில்லை. ஆனால் கருப்பு படம் அதற்கெல்லாம் விதிவிலக்காக சிங்கம் படம் போல சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என முதலில் தகவல் வெளியான நிலையில், இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த படம் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் நடக்கவில்லை. கருப்பு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இன்னும் யாரும் வாங்கவில்லை. அந்த வியாபாரம் நடக்காமல் படத்தை வெளியிட முடியாத சூழல் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் மற்றொரு சிக்கலும் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கருப்பு படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் கேட்கும் ஒடிடி நிறுவனங்கள், கார்த்தி நடிப்பில் உருவாகும் கைதி 2 படத்தையும் சேர்த்து தந்தால் 2 படங்களையும் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக நிபந்தனை விதிக்கின்றனர். ஆனால் கைதி 2 படத்தின் மொத்த பட்ஜெட் இன்னும் தீர்மானிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது கைதி 2 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விலை என்ன என்று தீர்மானிப்பதில் குழப்பம் நீடிக்கிறது. தனது அண்ணன் சூர்யா நடித்த கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகட்டும் என்று நடிகர் கார்த்தி, தனது சர்தார் 2 படம் ரிலீசை பொங்கலுக்கு தள்ளி வைத்தார். ஆனால் கைதி 2 படம் தந்தால்தான் கருப்பு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்குவோம் என்று ஓடிடி தளங்கள் நெருக்கடி தருவதால், தம்பி கார்த்தி நடித்த படமே சூர்யா நடித்த கருப்பு படத்துக்கு தடையாக மாறிவிட்டது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





