நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் வரும் பொங்கலுக்கு அடுத்த ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக மாறிய நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு தயாராகி விட்டார். அதனால் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் போது மத்திய அரசு மாநில அரசு இரு தரப்பில் இருந்தும் படத்துக்கு ஏதேனும் இடையூறுகளும் சிக்கல்களும் ஏற்படலாம் என்ற சூழல் உருவாகி வருகிறது.
இதற்கிடையே ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் வாங்குவதாக இருந்தது. அதற்கான விலை ரூ. 100 கோடி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ராகுல் இப்போது அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படத்தை தயாரிக்க உள்ளதால், அவர் ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை வாங்கவில்லை என்று விலகிவிட்டார்.
இதையடுத்து விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் அல்லது பைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 100 கோடி ரூபாய் விலை கொடுக்க முடியுமா என்பதில் அவர்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.
ஜனநாயகன் படத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினால், எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா, திமுகவை எதிர்க்கும் விஜய்க்கு அக்கட்சியினர் தரப்பில் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் பாதிப்பது வினியோகஸ்தர்தானே என்ற நிலையில் விஜய் படத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என வினியோகஸ்தர்கள் பலரும் கருதுவதால் ஜனநாயகன் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.





