கோலிவுட்டில் பலரால் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக இருப்பவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான அவர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக காதலில் விழுந்தேன் படத்தில் அவர் இசையாமித்த நாக்க முக்க பாடல் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.
அதேபோல் விஜய்க்கு இசையமைத்த வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய இரண்டு படங்களின் பாடல்களும் அதிர்புதிரி ஹிட்டடித்தன. இசையமைப்பாளராக மட்டும் ஜொலித்துவந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
குறிப்பாக பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு சூப்பர் வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர், நடிகர் என்று வலம் வந்த அவர் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராகவும் அவதரித்தார். அவருக்கு பாத்திமா என்ற மனைவி இருக்கிறார்.அவர்களுக்கு மீரா என்ற மகள் இருந்தார். அவருக்கு வயது 16 மட்டுமே ஆகிறது.
12ஆம் வகுப்பு படித்துவரும் மீரா கடந்த சில வருடங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இன்று அதிகாலை மூன்று மணிக்கு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை மட்டுமின்றி பலரையும் சோகத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது. திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது.
இந்நிலையில் அஞ்சலி செலுத்த வந்த தயாரிப்பாளர் அம்மா சிவா இதுகுறித்து பேசுகையில், “இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று விஜய் ஆண்டனி எப்படி பல திறமைகளை கொண்டிருக்கிறாரோ அதேபோல்தான் மீராவும் பல திறமைகளை பெற்றிருந்தவர். நன்றாக படிக்கக்கூடியவர். அதுமட்டுமின்றி பல விருதுகளையும் அவர் வாங்கியிருக்கிறார்.
எந்த நேரமும் துறுதுறு என்று இருக்ககூடியவர் மீரா. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கே வரும்வரை அது பொய்யான செய்தி என்றுதான் நினைத்தேன். ஆனால் பிணவறைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று இங்கு சொல்லப்பட்டவுடன் உடைந்துபோயிட்டேன். அந்த குழந்தை உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு அவர் சென்றதை என்னால் நம்பமுடியவில்லை. வேறு எதோ பிரச்னை இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது” என்றார்.





