சினிமாவை பொறுத்த வரை ஆடுபுலி ஆட்டம் போல ரொம்பவும் ரிஸ்க் ஆனது. எப்போது ஒரு நடிகர் அல்லது நடிகையின் மார்க்கெட் உச்சத்தை தொடும், எப்போது அதல பாதாளத்தை தொடும் என்பதை யாராலும் தீர்மானிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி தோல்விதான் அவர்களது இமேஜை தீர்மானிக்கிறது. இதில் எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்ற முன்னணி நடிகர்களே தோல்வி படங்களை தந்த நேரத்தில் மார்க்கெட்டில் கடும் சரிவை சந்தித்திருக்கின்றனர். உதாரணமாக வேட்டைக்காரன் வில்லு சுறா வேலாயுதம் அழகிய தமிழ் மகன் போன்ற படங்கள் விஜய்க்கு தொடர் தோல்வி படங்களாக இருந்தன. பின்பு அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இதே போல் கமலுக்கும் கூட கடந்தாண்டில் இந்தியன் 2 படம் பெரிய தோல்வியை தந்தது. இயக்குனர் ஷங்கருக்கு இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என 2 படங்களுமே பிளாப் தான். அஜீத்குமாருக்கு விடாமுயற்சி பலத்த தோல்வியை பரிசளித்தது. ரஜினிக்கு அண்ணாத்த படம் சரியாக போகவில்லை. வேட்டையன் படமும் பெரிய வெற்றியை தரவில்லை.
ஆனால் நடிகர்கள் தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து அவர்கள் ஓரிரு வெற்றிப் படங்களை கொடுத்து பழைய உயரத்துக்கு வந்து விடுகின்றனர். ஆனால் நடிகைகள் தொடர் தோல்வி படங்களை தந்தால் அந்த அதல பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருவது ரொம்பவும் கடினம். ஏனெனில் அதற்குள் பல புதுமுக நடிகைகள் முக்கிய ஹீரோக்கள் படங்களில் இடம்பிடித்து விடுகின்றனர்.
நடிகை நயன்தாராவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தோல்வியே தொடர்கிறது. அவரது 75வது படம் அன்னபூரணி படமும் சரியாக போகவில்லை. சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியான டெஸ்ட் படமும் படுதோல்வி அடைந்தது. இதனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தடாலடியாக ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கின்றனர்.
அதாவது நயன்தாராவுக்கு பேசிய சம்பளத்தில் பாதியை மட்டுமே கொடுத்து, மீதியை அந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே தருவதாக அக்ரிமென்ட் போடுகின்றனர். தனது சம்பளம் மட்டுமின்றி படத்தின் லாபத்தில் குறிப்பிட சதவீதத்தை கேட்கும் பிளானில் இருந்தார் நயன்தாரா. ஆனால் தனது படங்கள் நஷ்டத்தை தருவதால், பேசிய சம்பளத்தில் பாதி தான் தருவோம் என தயாரிப்பாளர்கள் தனது சம்பளத்திலேயே கை வைத்து விட்டதால் பயங்கர அப்செட்டில் நயன்தாரா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





