நடிகை ராதிகா, தமிழ் சினிமாவில் உள்ள சீனியர் நடிகைகளில் ஒருவர். கிழக்கு போகும் ரயில் படத்தின் மூலம், இயக்குநர் இமயம் பாரதிராஜா மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர். மோதிர கையால் குட்டுப்பட்டவர் என்பதால், இப்போதும் நடிப்புலகில் ராதிகாவுக்கு என ஒரு சிறப்பான தனியிடம் உண்டு.
துவக்கத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ராதிகா, ஒரு கட்டத்தில் அம்மா ரோல்களுக்கு மாறினார். இப்போதும் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக ராதிகா நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சினிமாவில் மட்டுமின்றி ராடன் தயாரிப்பு நிறுவனம் மூலம் டிவி சீரியல்களை தயாரிக்கவும், டிவி சீரியல்களில் நடிக்கவும் செய்கிறார். அந்த வகையில் சித்தி சீரியல், ராதிகாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற சில தொடர்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ராதிகா தயாரிப்பில் கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிஸியாக இருக்கும் நடிகை ராதிகா, தனது கணவர் சரத்குமார் நடத்தி வரும் சமத்து மக்கள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அதனால், அடிக்கடி பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சினிமா சார்ந்த விழாக்களிலும் அதிகளவில் கலந்துக்கொள்கிறார்.
சமீபத்தில் வேலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராதிகா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது ராதிகா பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால், எப்போதும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் செல்போன்களை அளவாக பயன்படுத்த வேண்டும். அதிலேயே மூழ்கி விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன், ராதிகாவின் நீண்டகால நண்பராக உள்ள நிலையில், அவர் ஏழு ஆண்டுகளாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனிமனித விழிப்புணர்வு, சுதந்திரம், சமூக தாக்கங்களை இந்த நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதாக கமல் கூறிவரும் நிலையில், ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதை விட வேறு என்ன பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறது என்ற ராதிகாவின் விமர்சனம், வைரலாகி வருகிறது.





