நடிகர் ராகவா லாரன்ஸ், நடனக் கலைஞராகவும் நடிகராகவும் மட்டுமின்றி ந்ல சமூக சேவையாளராகவும் தமிழக மக்களால் பார்க்கப்படுகிறார். இன்றைய தமிழ் சினிமாவில் தர்ம காரியங்கள் செய்வதில், பிறருக்கு உதவுவதில் நடிகர் கேப்டன் விஜயகாந்தை போலவே, ஆர்வம் மிக்க ஒரு நல்ல மனிதராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
கடந்த மே 1ம் தேதி, தொழிலாளர் தினத்தன்று மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், உதவி தேவைப்படும் மக்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தேடிச் சென்று உதவி செய்வதுதான் இந்த சேவை அமைப்பின் நோக்கம். இதில் மக்களும் என்னோடு கைகேோர்த்து இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
எப்போதும், எந்த காலகட்டத்திலும் இந்த சேவை அமைப்பு அரசியல் இயக்கமாக மாறாது. கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது. அந்த சந்தோஷமே எனக்கு போதும். அரசியல் நிச்சயம் வேண்டாம் என்று உறுதியாக கூறியிருக்கிற ராகவா லாரன்ஸ் முதல்கட்டமாக 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்குகிறார்.
ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக இருந்தாலும், இப்போது நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதே நேரத்தில் அவரது தயாரிப்பில், நடிப்பில், இயக்கத்தில் வெளிவந்த முனி அதைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் சக்கைப் போடு போட்ட வெற்றிப் படங்களாக இருக்கின்றன. இப்போது சுந்தர் சியின் அரண்மனை 4 வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா 4 படத்தை தயாரிக்க தயாராகி விட்டார் ராகவா லாரன்ஸ்.
சில தினங்களாக காஞ்சனா 4 படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக காஞ்சனா 4 படத்தில், சீதாராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூர் நாயகியாக நடிப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதுவரை தமிழ் படங்களில் நடிக்காத அவர், முதல் தடவையிலேயே திகில் படத்தில் அறிமுகம் ஆகிறாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், சில தினங்களாக சமூக வலைதளங்களில் காஞ்சனா 4 படம் குறித்த பல்வேறு வதந்திகள் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. அதிகாரபூர்வமாக அறிவிப்பை, மிக விரைவில் ராகவேந்திரா புரடக்சன்ஸ் வெளியிடும் என்று அதில் கூறியிருக்கிறார். ஆக, இந்த படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பது, அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உறுதியாகும்.





