- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், தவெக சார்பில் போட்டியிட போகிறேனா? - வரும் 11ம் ...

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், தவெக சார்பில் போட்டியிட போகிறேனா? – வரும் 11ம் தேதி வரை வெயிட் பண்ணுங்க என்று சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு விரைவில் வர இருப்பதாகவும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் அவர் போட்டியிட உள்ளார் எனவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு விளக்கம் தரும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டு என்னை சந்திக்க நேரம் கேட்கின்றனர்.

- Advertisement -

இந்த யூகங்கள் ஒரு கட்டத்தில் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் இந்த குறிப்பை பகிர விரும்புகிறேன். நான் தற்போது பென்ஸ் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன். எனது படப்பிடிப்பு வருகிற 10ம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசிர்வாதங்களுடன் என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவு வரும் 11ம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே மாற்றம் என்ற சேவை அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் மூலம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

- Advertisement -

தனது அரசியல் வருகை குறித்து ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. என்னால் இயன்ற அளவுக்கு முடிந்த உதவிகளை இப்போதும் செய்துகொண்டு தான் வருகிறேன். அதுவே போதிய மனநிறைவை எனக்கு தருகிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவாரா? திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. எனினும் வரும் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு ராகவா லாரன்ஸ் இதுபற்றிய முழு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்