தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு குணச்சித்திர நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. துவக்கத்தில் நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் துணை காமெடி நடிகராக தம்பி ராமையா காணப்பட்டார். சில்லுன்னு ஒரு காதல், ஆறு, ஜோர், வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருந்தார்.
அடுத்து நடிகர் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கியவர் தம்பி ராமையா. பிறகு வடிவேலுவை விட்டு விலகி பல படங்களில் தம்பி ராமையா காமெடி ரோலில் நடித்தார். குறிப்பாக கும்கி, கழுகு, மைனா, அப்பா, கொம்பன், சாட்டை, திருமணம், நெடுஞ்சாலை, இருமுகன் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்தது.
தம்பி ராமையா மகன் உமாபதியும் ஒரு திரைப்பட நடிகர்தான். அவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த வகையில் நடிகர் அர்ஜூனும், தம்பி ராமையாவும் சம்பந்திகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த ராஜாகிளி என்ற படத்தை தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதி டைரக்ட் செய்திருக்கிறார். சரவணபவன் அண்ணாச்சி கதையை மையமாக கொண்ட இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ராஜகோபால் அண்ணாச்சி, ஜீவஜோதி உண்மை கதை பரபரப்பான சம்பவங்களை கொண்டது.
ராஜாகிளி படம் வருகிற நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் திரைக்கு வருகிறது. அந்த நேரத்தில் ராஜாகிளி படத்தை வெளியிட்டால் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காது என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் 13ம் தேதி, ராஜாகிளி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் அடுத்த 7 நாட்களில் 20ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் அதற்குள் ஒரு வாரத்தில் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவிடலாம் என்று தம்பி ராமையாக கருதுகிறார். புஷ்பா 2, விடுதலை 2 படங்களுக்குள் இடையில் பறந்து வரும் ராஜாகிளி, வெற்றி மாலை சூடுமா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.





