ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்து கடைசியாக வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். கடந்த 1979ம் ஆண்டில் அந்த படம் வெளியானது. அதற்கு பிறகு 46 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவே இல்லை. அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களால் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
ரஜினி கமல் இருவருமே தமிழ் சினிமாவில் சிகரங்களை தொட்ட ஜாம்பவான்களாக இருப்பதால் இருவருக்கும் சரிசமமான கேரக்டர்கள் என்றால் மட்டுமே அந்த படம் இரு தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்படும். ஒருவேளை இருவரில் ஒருவருக்கு கேரக்டர் சொதப்பி விட்டாலும் ரசிகர்கள் படத்தை ஏற்க மாட்டார்கள். படம் பெரிய வெற்றியை பெறாது.
அந்த ஒரு காரணத்துக்காகவே தங்களுக்கு சரியான கதை அமையாத நிலையில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். அதே போல் ரஜினி கமல் இருவருக்கும் சரியான கேரக்டர்களை கொண்ட கதை உருவாக்குவதிலும் இயக்குனர்கள் யாரும் அதிக ஆர்வமும் காட்டவில்லை.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்க ஒரு படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாகவும் தயாரிக்கவும் முன்வந்தது. தலைவர் 173 படத்தை ரஜினி முடித்த பிறகு ரஜினி கமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்கு மேலாகும் என்ற ஒரு உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதனால் 2027ம் ஆண்டில்தான் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட வாய்ப்புள்ளது. இது ரஜினி கமல் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
அதே வேளையில் ரஜினி கமல் நடிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சட்டசபை தேர்தலில் பலத்த தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இப்போதைக்கு படத்தயாரிப்பு எதுவும் வேண்டாம் என்ற முடிவில் ரெட் ஜெயிண்ட் இருப்பதால் ரஜினி கமல் படத்தை டிராப் செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.





