தனது படங்களில் இளமை பொங்கும் மனம் நிறைந்த காதலை பல விதங்களில் வசீகரமாக சொன்னவர் இயக்குனர் பாரதிராஜா. கடலோர கவிதைகள் அலைகள் ஓய்வதில்லை முதல் மரியாதை வேதம் புதிது 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் என அவர் இயக்கிய படங்களில் காதலும் இருக்கும் கவிதையும் இருக்கும். மண் சார்ந்த கிராம மக்களின் வாழ்வியலும் அதில் கலந்திருக்கும்.
தனது 84வது வயதில் பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். தமிழக முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்து இசைஞானி இளையராஜா என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று தேனியில் உள்ள வத்தலகுண்டுவில் அவருக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கௌதம் மேனன் பங்கேற்ற ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார். அப்போது தன்னிடம் கேள்விகள் கேட்ட இயக்குனர் கௌதம் மேனனிடம் பாரதிராஜா கூறியதாவது, ஒருநாள் நானும் என் தங்கையும் எங்கேயோ போயிட்டு தேனியில் உள்ள எங்க வீட்டுக்கு காரில் வந்துட்டு இருந்தோம்.
பூக்கடையில் ஒரு பெண் நிக்குது. வண்டிய நிறுத்தினேன். பூக்கடையில் அந்தப் பொண்ணு ஏதோ வாங்கிட்டு இருந்தா. அவளின் பின்புறம் மட்டும் பார்த்துட்டு என் சிறு வயது காதலி மாதிரி இருக்கேன்னு என் தங்கையிடம் சொன்னேன். அவ திரும்பி பார்த்ததும் எஸ், ஆமா அது அவளே தான். எப்படி இத்தனை நாள் கழிச்சு தலை எல்லாம் முடி நரைச்ச பிறகும் சரியா சொன்னீங்கன்னு தங்கை கேட்டா. அதான் லவ் என்றேன்.
அந்த அம்மா கிட்ட வந்து பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தேன்னு சொல்லுச்சு. கண்ணீரோட கலங்கிட்டேன். அப்பறம் ஒருநாள் வீட்டுக்கு வந்துச்சு. கல்யாணத்துக்கு வந்திருங்கன்னு சொல்லிச்சு. காஃபி சாப்பிடறியாம்னு கேட்டேன். அந்தம்மாவே எனக்காக அடுப்படிக்கு போயி காஃபி போட்டு வந்து கொடுத்துச்சு.
அந்த காஃபியை கையில் வாங்குனேன் பாருங்க. அங்கேயே என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு. அவ கையால ஒரு கப் காபி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அது போதும் அவ்ளோதான் காதல். அந்த நினைவு இன்னும் என் மனசில் ஈரமா இருக்கு என்று இயக்குநர் கௌதம் மேனன் செய்த நேர்காணலில் இயக்குநர் பாரதிராஜா தனது காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.





