முன்பெல்லாம் தமிழ் சினிமாக்கள் தமிழில் மட்டுமே படமாக்கப்பட்டன. நல்ல படங்களாக அவை மிகப்பெரிய வெற்றியை பெறும் பட்சத்தில் அவை மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டன. சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வத்தால் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் அந்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டன.
ஆனால் இப்போது பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் மெகா பட்ஜெட் படங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக மற்றமொழி சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர், நடிகைகளை பான் இந்தியா படங்களில் நடிக்க வைத்து, சகல தரப்பு ரசிகர்களையும் கவர்கின்றனர்.
அந்த வகையில் இதுவரை ஜவான், பதான், ஆர்ஆர்ஆர், பாகுபலி, கல்கி 2898 ஏடி, கேஜிஎப் போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களாக, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் மெகா ஹிட் படங்களாக பெரிய அளவில் சாதனை புரிந்திருக்கின்றன. அதனால் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் படங்கள் என்றாலே 1000 கோடி ரூபாய் வசூல் என்று பேசப்படுகின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் தமிழில் வெளியான படங்கள் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை எந்த படமும் தொடவில்லை. இந்த ஆண்டில் 140க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியான நிலையில் அரண்மனை 4, மகாராஜா, ராயன் ஆகிய 3 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை புரிந்திருக்கின்றன. வெற்றிப் படங்களாக 10 படங்கள் கூட தமிழில் தேறவில்லை.
இந்த சூழலில், தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரூ. 1000 கோடி என்ற வசூல் சாதனையை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியாகும் வேட்டையன், விஜய் நடிப்பில் வெளியாகும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், சூர்யா நடிப்பில் வெளியாகும் கங்குவா போன்ற படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏனெனில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா, தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன், வெங்கட்பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் என 3 படங்களுமே சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட படங்களாக தான் கூறப்படுகின்றன. இதில் ஒருவரது படமாவது ரூ. 1000 கோடி என்ற இலக்கை தொடுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஜெயிலர் ரூ. 600 கோடி, லியோ ரூ. 650 கோடி வசூலை கடந்த முறை தொட்ட நிலையில், இந்த விஜய், ரஜினி போட்டி பலமாக இருக்குமா என்பதும், இடையில் சூர்யா கங்குவா மூலம் சாதிப்பாரா என்பதும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





