நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை நடிப்பில் ஒரு சிவாஜி கணேசன் போல ஒரு கமல்ஹாசன் போல ஒரு விக்ரம் போல சாதித்து காட்ட வேண்டும், ரசிகர்கள் தன் நடிப்பை பார்த்து பூரித்துப் போய் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எப்போதுமே இருந்தது இல்லை. கமர்ஷியல் என்ற பெயரில் மசாலா படங்களில் நடித்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.
தான் நடிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் வசூல் குவிய வேண்டும் என்பதே ரஜினியின் பிரதான நோக்கமாக எப்போதுமே இருந்து வருகிறது. லால் சலாம் படத்தில் நடிக்க இயக்குனரான அவரது மகள் ஐஸ்வர்யா, இந்த படத்தில் நடித்தால் உங்களுக்கு விருது கிடைக்கும் என்று கூறிய போது, எனக்கு விருது எல்லாம் வேண்டாம், படத்துக்கு நல்ல லாபம் கிடைக்குமா என மகளிடமே பிஸினஸ் பேசியவர்தான் நமது சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் அவரது படங்களை பொருத்த வரை பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று லாபத்தை குவிக்க வேண்டும். 600 கோடி 700 கோடி ரூபாய் என படத்தின் பட்ஜெட்டை விட 2 மடங்கு 3 மடங்கு லாபம் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதுமே ரஜினிகாந்த் உஷாராக இருந்து வருகிறார்.
அதனால் தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஹிட் படங்களை தருகிறார்களோ அவர்களை அழைத்து தனது படங்களை இயக்க வைக்கும் பார்மூலாவை ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அந்த பார்மூலாவின் படிதான் பா ரஞ்சித் கார்த்திக் சுப்பராஜ் சிறுத்தை சிவா நெல்சன் திலீப்குமார் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களை வரவழைத்து தனது படங்களை இயக்க வாய்ப்பளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அந்த வகையில் கபாலி காலா பேட்ட அண்ணாத்த ஜெயிலர் போன்ற படங்கள் உருவாகின. இப்போது கூலி படத்தை தொடர்ந்து அடுத்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்போதைக்கு பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர்கள் யார் என்ற வரிசையில் பார்க்கும் போது ரஜினியின் கவனத்திற்கு வந்தது இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண்குமார்.
சித்தா வீர தீர சூரன் 2 படங்களை இயக்கிய அருண்குமார், வலிமை துணிவு ஜனநாயகன் படங்களின் இயக்குனர் எச் வினோத் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டிருக்கிறார். இதில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும். ரஜினி பெரும்பாலும் விஜய் நடிப்பில் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனருக்கு முக்கியத்துவம் தருவார் என்று ஒரு தகவலும் கோலிவுட்டில் இருப்பதால் இதில் இயக்குனர் எச் வினோத்துக்கு முன்னுரிமை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.





