நடிகர் அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனர் ஹெச் வினோத்திடம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் இல்லை என்றாலும், ஒரு கமர்சியல் படமாக துணிவு வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு அஜித் பிறந்தநாளை மே ஒன்றாம் தேதியே வெளியானது. ஆனால் அதன் பிறகு கதை எழுதுவதில் மகிழ் திருமேனி மும்முரம் காட்ட, இந்தப் பக்கம் ஏகே பைக்கை எடுத்துக் கொண்டு சென்றதால் சூட்டிங் பணிகள் தாமதம் ஆகின.
ஒரு கட்டத்தில் படம் இருக்கா இல்லையா என்று குழப்பம் ஏற்பட, விடாமுயற்சி கைவிடப்படவில்லை நிச்சயம் எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் தொடங்கியது. இந்த திரைப்படம் க்ரைம் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட இருக்கிறதாம்.
இந்தத் திரைப்படத்தில் திரிஷா, அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறாராம். இது போக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ், விடாமுயற்சி திரைப்படத்தில் இருக்கிறார். தற்போது இதன் சூட்டிங் பணிகள் மும்முரமாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகின்றன. அனேகமாக ஒட்டுமொத்த திரைப்படமும் அங்கு தான் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் அர்ஜுன் மற்றும் அஜித் குமார் மூவரும் அஜர்பைஜானில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்தும் போது போட்டோ எடுத்துக் கொண்டனர். அது இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமார் மற்ற நடிகர்களை எடுத்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பதில் ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் நீரவ் ஷா இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு யோசித்துக் கொண்டிருக்க, ஆரம்பம் திரைப்படத்தில் தன்னுடன் பணிபுரிந்த ஓம் பிரகாஷை பரிந்துரைத்துள்ளார் அஜித்குமார். அவரோ இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தில் பிசியாக இருக்க, நேரடியாக இயக்குனர் இடமே அஜித்குமார் பேசியிருக்கிறார். ஏகே கேட்டதால் விஷ்ணுவர்தன் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஓகே என்றதாகவும், இதன் காரணமாகவே ஓம் பிரகாஷ் விடாமுயற்சியில் இணைந்து இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





