ரஜினியின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினி லால்சலாம் என்னும் படத்தில் நடித்தார்.
அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கிய இந்த திரைப்படம் பலருக்கு வந்தது கூட தெரியாது. திரைக்கதை மிகவும் தொய்வாக இருந்ததால், லால் சலாம் படம் வெற்றி பெற தவறியது. தொடர்ந்து அவர் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்தை கொடுத்தார். இது விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூலில் அந்த அளவு கவனம் ஈர்க்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அவரது 171 வது திரைப்படம் ஆன கூலியில் நடித்துள்ளார். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ரஜினியின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே உருவாக்குகிறது.
அனிருத் கூலி திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான சிக்குடு பாடலின் சிறிய பகுதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரஜினியின் நடன அசைவுகள் கவனம் இருக்கும் ஈர்க்கும் வகையில் அமைந்தன. இதில் தேவாவாக ரஜினிகாந்த், சைமனாக நாகார்ஜீனா, ராஜசேகராக சத்யராஜ், ப்ரீத்தியாக ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். கூலி திரைப்படம் LCU விலிருந்து பிரிந்து ஒரு தனித்த படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். அதேபோல் இது தங்க கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. இதற்கான காட்சிகள் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் ஷெட் போடப்பட்டு எடுக்கப்பட்டன.
இப்படியான சூழலில் படத்திலிருந்து புதிய அப்டேட் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மட்டும் இன்றி பிற நடிகர்களின் ரசிகர்களிடையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கூலி படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றது தெரிய வந்தது. இதனால் கண்டிப்பாக ட்ரெய்லர் அறிவிப்பாக தான் இருக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பு கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.





