பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சத்யராஜ் நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை ஏற்கனவே பகிர்ந்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
அதில், இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் முழுவதுமாக பார்த்துவிட்டு என்னை வந்து கட்டி பிடித்து பாராட்டினார். தளபதி போன்று இந்த திரைப்படம் இருப்பதாகவும் நாம் மீண்டும் இணையலாம் எனவும் கூறி இருந்தார். இந்த திரைப்படத்தின் முதல் பாதி எமோஷனலாக இருக்கும் என்றும் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆக்சன் களத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் மிக நன்றாக இருப்பதாக கூறினார்கள். அனிருத்தையும் பாராட்டியிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
கூலி படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதற்கு முன்னதாக 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் பிறகு 36 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் ரஜினி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
மொத்தம் மூன்று நிமிடங்கள் இருக்கிறது இந்த ட்ரெய்லர். படத்தில் சத்யராஜ் ரஜினிகாந்துக்கு நண்பனாக நடித்திருக்கிறார். அதேபோல் சத்யராஜின் மகளாக வருகிறார் சுருதிஹாசன். மிரட்டும் வில்லனாக நடித்திருக்கிறார் நாகர்ஜுனா. தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதும், ரஜினிகாந்தின் கேங் ஒரு காலத்தில் இந்த வேலையை செய்திருப்பதும் ட்ரெய்லரில் காட்டுகிறார்கள்.
குறிப்பாக, இந்த தேவா பத்தி தெரிஞ்சி இருந்தும் என்கிட்டேயே விளையாண்டிருக்க, இங்கே இருக்கிற 14,400 பேர்ல எனக்கு அந்த ஒரு கூலி தான் வேணும் போன்ற டயலாக்குகள் அனல் பறக்கின்றன. சில எமோஷன் காட்சிகளும் படத்தில் இருப்பது முன்னோட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது. ஒட்டு மொத்தமாக டிரைலர் பலருக்கும் பிடித்திருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.





