ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டு இருக்கும் நிலையில் “கைதி” பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு “சூப்பர் ஸ்டார் பட்டத்தின் சகாப்தம் முடிந்தது” என்பது போல் ஒரு டிவிட்டை பகிர்ந்திருந்தார். அவர் அவ்வாறு பகிர்ந்த டிவிட் ரஜினி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஏன் அவ்வாறு டிவீட் செய்தார் என்பது குறித்து ஒரு காரணத்தை கூறியுள்ளார்.
“புலி வயதாகி விட்டால் நரி சீண்டிப்பார்க்குமாம். அது போல் 72 வயதான ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் ஆகியோர் சீண்டிப்பார்க்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்தது என்று கிண்டலும் நையாண்டியும் கலந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசாத சூர்யா, கார்த்தி பட தயாரிப்பாளர், ஏன் அப்படி பேசினார் என்று சொன்னால் வரலாற்றை சற்று புரட்டிப்பார்க்க வேண்டும்.
வரலாற்றில் பார்த்தோம் என்றால் சூர்யாவின் நேருக்கு நேர் பட வெளியீட்டின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமாரின் மகன் சூர்யாவை பற்றி ஒரு விமர்சனம் செய்திருக்கிறார். ‘இந்த பையனுக்குத்தான் நடிப்பே வரலையே, ஏன் நடிக்க வருகிறார்’ என்று ரஜினிகாந்த் கூறினார். அன்றிலிருந்தே சூர்யா குடும்பத்திற்கும் ரஜினி குடும்பத்திற்கும் ஆகாது. இப்போது இதுதான் சந்தர்ப்பம் என்று சூர்யா, கார்த்தி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்” என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





