நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வெற்றிப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்ற வடிவேலு டயலாக்கை தன் சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து கடைபிடிப்பவர் ரஜினிகாந்த் தான்.
ஏனெனில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அவரது சில படங்கள், மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கின்றன். அதே நேரத்தில் சுமாராக ஓடினால் கூட போதும் என நினைத்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக பாட்ஷா படத்துக்கு பிறகு ரஜினிக்கான மாஸ் எகிறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினி நடித்த படங்களில் பாபா, குசேலன், லிங்கா, தர்பார், அண்ணாத்த, லால் சலாம் போன்ற படங்கள் பலத்த ஏமாற்றம் தந்தாலும், கபாலி, காலா, பேட்ட, ஜெயிலர் சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் ரஜினியை வெற லெவலில் ஜெயிக்க வைத்தது. ஜெயிலர் தந்த வெற்றி வேட்டையன், கூலி என அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் பலத்தை ரஜினிக்கு தந்திருக்கிறது.
வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட ரஜினிகாந்த் அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்துக்கு பிறகு மாரி செல்வராஜிடம் ஒரு கதையை ரஜினிகாந்த் ஓகே செய்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சரித்திர நாவல் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். மதுரை எம்பி சு வெங்கடேஷ் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவல் கதையில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை ஈரோஸ் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன், எந்திரன் 2 ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்த நிலையில், அந்த படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.இப்போது 4வது முறையாக மீண்டும் ரஜினி – ஷங்கர் கூட்டணி இணைகிறது, பொன்னியின் செல்வன் படத்தில் ஏதேனும் சில காட்சிகளில் தனக்கு நடிக்க வாய்ப்பு கேட்டார் ரஜினிகாந்த், ஆனால் மணிரத்னம் தரவில்லை. இப்போது சரித்திர நாவல் கதையில் வரலாற்று நாயகனாக ரஜினிகாந்த் நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





