தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் காலம் என்று கூறலாம். அந்தளவிற்கு முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ட்ரெண்ட் கவனிக்கப்பட்டது தனுஷின் 3 திரைப்படத்தில் தான். அந்த படம் வெளியாகும் போது, பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்படவில்லை.
பாடல்கள் ஹிட் ஆக, படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது. இந்த நிலையில், மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தை, ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதுவும் மூணு படத்தின் பாடலுக்கு திரையரங்கில் பலரும் வைஃப் செய்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின.
இதே போல் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படமும் ரிலீஸ் செய்யப்பட்டு, அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இங்கு மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் சூர்யாவிற்கு அதிக ரசிகர்கள் இருப்பதால், வாரணம் ஆயிரம் ரிலீஸ் கவனிக்கப்பட்டது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, ரீ ரிலீஸ் திரைப்படமாக கொண்டாடப்பட்டது விஜயின் கில்லி படம். உண்மையில் ஒரு மறு வெளியிட்டு திரைப்படத்திற்கு இத்தனை வரவேற்பா என்று தமிழ் திரையுலகமே அசந்து போனது. அந்த அளவுக்கு ஒரு புது படம் வெளியான அனுபவத்தை இந்த திரைப்படம் கொடுத்தது.
கில்லி திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கொண்டாட்ட களமாய் மாற்றினர். காட்சிக்கு காட்சி பலரும் இருக்கையில் அமராமல் வைப் செய்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டன. கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 25 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை கில்லி பிடித்தது.
இப்படியான சூழலில் ரஜினியின் படையப்பா திரைப்படத்தையும் மீண்டும் வெளியிட செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகிறது. ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனம், ஏ ஆர் ரகுமானின் அசத்தலான இசை, கே எஸ் ரவிக்குமாரின் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்தும் வேற லெவலில் இருந்ததால், இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேனப்பன் படையப்பாவை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் ரஜினியை சந்தித்து சம்மதம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படையப்பாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுகிறது.





