ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் டாப் நடிகர்களாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும் டாப் நடிகராக வலம் வந்தார். ஆனால் விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் அவர் பல அவமானங்களை எதிர்கொண்டார். அவர் தனது சொந்த பாஷையான மதுரை பாஷை பேசியதை வைத்தே அவரை படத்தில் இருந்தெல்லாம் நீக்கியிருக்கிறார்கள்.
எனினும் தனது விடாமுயற்சியால் விஜயகாந்த், ஹீரோவாக களமிறங்கி பல ரசிகர்களை தனக்குள் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்தால் தான் நடிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். அவர் ஏன் அவ்வாறு கூறினார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, விஜய்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “என் கேள்விக்கு என்ன பதில்”. இத்திரைப்படத்தை பி.மாதவன் என்பவர் இயக்கியிருந்தார்.
இதில் ரஜினிகாந்திற்கு தம்பியாக விஜய்குமார் நடித்திருந்தார். ஆனால் விஜய்குமார் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜயகாந்தைதான் பி.மாதவன் அணுகியிருக்கிறார். அவரும் சரி என ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கப்போவதை அறிந்த ரஜினிகாந்த், “நான் எனது முடிவை யோசித்து சொல்கிறேன்” என கூறிவிட்டாராம். அதன் பின் இயக்குனர் என்ன காரணம் என கேட்க, அதற்கு ரஜினிகாந்த், “நான் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க மாட்டேன், அந்த பழக்கத்தை எல்லாம் விட்டுவிட்டேன்” என கூறியிருக்கிறார்.
இயக்குனரோ, “நீங்கள்தானே படத்தில் ஹீரோ, விஜயகாந்த் உங்களுக்கு தம்பியாகத்தானே நடிக்கப்போகிறார்” என கூறியிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த், “எனக்கு அதில் விருப்பமில்லை. நீங்கள் வேண்டுமென்றால் வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் வேறு வழியில்லாமல் விஜயகாந்தை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.





