தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் ஏராளமான வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர். அவரது இயக்கத்தில் வெளியான தங்கைக்கோர் கீதம் உயிருள்ள வரை உஷா என் தங்கை கல்யாணி உறவை காத்த கிளி என பல படங்கள் ரசிகர்கள் கொண்டாடிய படங்களாக இருந்தன.
இயக்குனர் டி ராஜேந்தரை பொருத்த வரை அவரும் படத்தில் நாயகனாக நடித்திருப்பார். மேலும் கதாநாயகியை தொடாமல் நடிப்பது இவரது பெருமைக்குரிய பாலிசி, இயக்குனர் நடிகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் அவரே தான். பாடல்களை அவரே எழுதி அவரே சொந்த குரலிலும் பாடுவார்.
மேலும் அவரே தனது படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார். எனவே அவரை அஷ்டவதானி என்றுதான் அந்த காலகட்டத்தில் கோலிவுட்டில் அழைப்பார்கள். அத்துடன் அவர் பத்திரிகையாளராகவும் இருந்தார். உஷா என்ற வார இதழையும் அவர் நடத்தி வந்தார். இப்படி பன்முக தன்மை கொண்ட ஒரு கலைஞராக தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் டி ராஜேந்தர்.
இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் 1984ம் ஆண்டில் வெளியான உயிருள்ள வரை உஷா படம் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக இருந்தது. காதல் காவியமாக இந்த படம் அந்த காலகட்டத்தில் இளம் வயதினரின் மனதை கவர்ந்த படமாகும். படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. உயிருள்ளவரை உஷா படத்தை இன்று 6ம் தேதி ரி ரிலீஸ் செய்ய இயக்குனர் டி ராஜேந்தர் ஏற்கனனே திட்டமிட்டு அதுகுறித்து அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 3ம் தேதி டி ராஜேந்தரின் மூத்த மகன் நடிகர் சிலம்பரசன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி நடிகர் சிலம்பரசன் சினேகா சந்தானம் நிரோஷா விநாகயன் உள்ளிட்டோர் நடித்த சிலம்பாட்டம் என்ற படத்தை இன்று 6ம் தேதி ரி ரிலீஸ் செய்வதாக அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து இயக்குனர் டி ராஜேந்தர் தன் மகன் சிம்பு நடித்த சிலம்பாட்டம் ரி ரிலீஸ் காரணமாக இன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அறிவித்து இருந்த உயிருள்ள வரை உஷா படத்தை வருகிற 13ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டில் வெளியான இந்த படம் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது என்பது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.





