- Advertisement -
Homeபொழுதுபோக்குமகளின் ஆலோசனையை கேட்கமாட்டேன்.. வைரலாகும் ரஜினிகாந்த்தின் பேச்சு

மகளின் ஆலோசனையை கேட்கமாட்டேன்.. வைரலாகும் ரஜினிகாந்த்தின் பேச்சு

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் அவர். அப்போதுதான் தன்னைப் பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என நினைக்கிறார். படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்று கருதப்படுவது காலா மட்டும்தான். அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் என்றெல்லாம் சொல்ல முடியாது சுமார் ஹிட்தான் என பலர் கூறுவார்கள். அதற்கு பிறகு அவர் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதனால்தான் ஜெயிலர் படம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது.

அவர் தோல்வி படங்களை கொடுத்தாலும் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களைவிட மோசமான தோல்வியை தழுவியது கோச்சடையான் படம்தான். உடல்நலம் தேறிய பிறகு தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் மோஷன் கேப்சர் பாணியில் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் இது ரஜினி படமா இல்லை கார்ட்டூன் படமா என்ற குழப்ப நிலைக்கு சென்றனர். அந்த அளவுக்கு படம் திராபையாக இருந்தது.

இந்நிலையில் அந்தப் படம் குறித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுகுறித்து பேசிய அவர், “உடல்நலக்குறைவிலிருந்து மீண்டும் ஓய்வில் இருந்துவந்தேன். அப்போது நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் சிலரிடம் கதைகளை கேட்கவும் செய்தேன்.

எனது மகள் அதிபுத்திசாலி. என்னிடம் அவர் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என ஆலோசனையை கொடுத்தார். அவர் சொன்ன காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகலாம் என்று சொன்னார்கள். படத்தின் பெரும்பான்மையான பகுதிகளை பார்த்தபோது, கோச்சடையான் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எடுத்தவரை போதும். அப்படியே ரிலீஸ் செய்யுங்கள் என சொல்லிவிட்டேன்.

நான் நினைத்தபடி படம் சரியாக போகவில்லை. அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. எப்போதும் அதிபுத்திசாலிகளின் பேச்சை கேட்கக்கூடாது. அவர்களுடன் பழகக்கூடாது என்று” என பேசினார் ரஜினி. இதனை அவர் காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சை ஜெயிலர் ரிலீஸின்போது ரசிகர்கள் திடீரென ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

சற்று முன்