தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் படங்களில் நடித்திருந்தாலும் தனது வசீகரமான அழகால் திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவர் அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் திமிரு புடிச்சவன் பொதுவாக எம்மனசு தங்கம் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
மேலும் நிவேதா பெத்துராஜ் விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். பேட்மிண்டன் போட்டிகளிலும் பார்முலா 1 கார் போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வருங்கால கணவர் என்று வாலிபர் ஒருவருடன் ஜோடியாக நின்றபடி இருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அந்த இளைஞர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரான் என்றும் கூறியிருந்தார். இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகிய நிலையில் காதல் ஏற்பட்டதாகவும், இரு தரப்பு பெற்றோர்களும் தங்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ் கூறியிருந்தார். மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது காதல் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் தனக்கும் தொழிலதிபர் ரஜித் இப்ரானுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் வருங்கால கணவர் ரஜித் இப்ரான், பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் ஜூலி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 2018ம் ஆண்டு ரஜித் இப்ரானுடன் இருந்த புகைப்படங்கள், அவருடன் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் ரஜித் இப்ரான் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தனது பெஸ்டி என்று ஜூலி அவரை குறிப்பிட்டுள்ளார். அதனால் ரஜித் இப்ரான் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலராக இருக்கக்கூடும். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருக்கலாம்.
அதற்கு பின்னர் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் ரஜித் இப்ரான் காதலிக்க தொடங்கி இருக்கலாம். பெஸ்டி என குறிப்பிட்டு ஜூலி பதிவிட்டதால் ரஜித் இப்ரானை அவரது முன்னாள் காதலர் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இது உண்மையா, அவர்களுக்குள் இருந்தது வெறும் நட்புதானா என்பது குறித்த சரியான தகவல் இல்லை. அதே நேரத்தில் பிக்பாஸ் ஜூலியின் காதலர் எப்படி நிவேதா பெத்துராஜின் காதலராக மாறினார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.





