தமிழ் சினிமாவில் நடித்தாலும் இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கிறார் உலக நாயகன் நடிகர் கமலஹாசன். சினிமாத் துறையில் சகலகலா வல்லவனாக திகழும் நடிகர் கமலஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற சொந்த சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக அவர் நடிக்கும் படங்களையும் தயாரிக்கிறார். பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவரும் தக்லைப் படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக கூறி சில மோசடி நிறுவனங்கள், சினிமா ஆசை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பே இல்லாத சில நிறுவனங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனதுக்காக ஆடிசன் நடத்துவதாக கூறி மக்களை அழைத்து ஆடிசன் நடத்தி ஏமாற்றுவதாக, மோசடி செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து ராஜ்குமார் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு தருவதாக வரும் செய்திகள் எந்த வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்ததும் இது தொடர்பாக எச்சரிக்கை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் இதே போன்ற ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது. சமூக வலைதளங்களில் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி, நடிகர் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறி இதே போல் மோசடியில் சில நிறுவனங்களும், போலி காஸ்டிங் ஏஜண்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் சினிமாவில் நடிக்கும் ஆசையில் உள்ள ஆண்கள், பெண்கள் யாரும் இது போன்ற பொய்யான அறிவிப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று, நடிகர் சங்கம் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு எச்சரிக்க வேண்டும்.





