நடிகர் விஷாலுக்கு அண்மையில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே தோல்வியால் துவண்டு கிடந்த அவருக்கு, திரைத் துறையில் மார்க்கெட் இழந்திருந்த சூழலில் காப்பாற்றிவிட்டது தான் மார்க் ஆண்டனி திரைப்படம். இதனை ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருந்தார்.
டைம் டிராவல் கான்செப்ட்டை எந்தவித குழப்பமும் இல்லாமல் சுவாரசியமாக கூறியிருந்ததால் திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தது எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு. தனது நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியையும் அவர் மெருகேற்ற திரையரங்குகளில் கூட்டம் திரண்டது.
இப்படி விஷாலுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை மார்க் ஆண்டனி திரைப்படம் கொடுக்க, தற்போது அவர் உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு ரத்னம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்றது.
கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க யோகி பாபுவிற்கும் முக்கியமான ரோலை ஹரி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இதனால், ரத்னம் படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இந்த படத்தின் போஸ்டர் பலரும் எள்ளி நகையாடும் வகையிலேயே இருந்தது. ஒரு கையில் எதிரியின் தலையை துண்டாக வைத்து விட்டு ஆக்ரோஷமாக விஷால் கர்ஜிக்க, பலரும் அதைப் பார்த்து சிரித்தனர். இன்னும் ஹரி இந்த டெம்ப்ளேட்டை மாற்றவே இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இப்படியான சூழலில் தற்போது அந்த திரைப்படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டோன்ட் ஒரி மச்சி என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் முணுமுணுக்கும் வகையில் கொண்டாட்டக் களத்துடன் இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் பலரது வரவேற்பையும் பெற்றிருப்பதால், பட குழு சற்று ஆறுதல் அடைந்துள்ளது. அனேகமாக வரும் ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





