வழக்கமாக சினிமாவில் வில்லனாக நடிக்கும் சில நடிகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு திடீரென கதாநாயகனாக மாறி விடுவார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த் சத்யராஜ் சரத்குமார் போன்றவர்கள் அப்படிதான் மாறினார். அதுபோல் இப்போது காமெடி நடிகர்களும் ஹீரோக்களாக மாறி விடுகின்றனர்.
அதே நேரத்தில் ஹீரோ நடிகர்களுக்கும் வில்லன் கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் இருக்கிறது. நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன் மற்றும் தி கோட் படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார். அதே போல் நடிகர் விஜய் சேதுபதி பேட்ட மாஸ்டர் விக்ரம் மற்றும் இந்தியில் ஜவான் போன்ற படங்களில் வில்லனாக அசத்தியிருந்தார்.
எப்போதுமே நல்லவனாக நடிப்பதை காட்டிலும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் போது நடிப்பில் இன்னும் பல பரிமாணங்களை காட்டி ரசிகர்களை அசத்த முடியும். தி கோட் படத்தில் வில்லன் கேரக்டரில் விஜயின் நடிப்புதான் அந்த படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதே போல் வில்லன் கேரக்டரில் ஹீரோ நடிப்பது ரசிகர்களுக்கும் வித்யாசமான அனுபவத்தை தரும்.
அந்த வகையில் இப்போது நடிகர் ரவி மோகன் வில்லன் நடிகராக மாறியிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த அகிலன் இறைவன் காதலிக்க நேரமில்லை சைரன் 106 பிரதர் என பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், இப்போது அவர் பராசக்தி என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
இப்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் இன்று சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ள அவர், நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் சொந்தமாக டைரக்ட் செய்கிறார். நடிகராக இருந்து இயக்குனர் தயாரிப்பாளராக மாறிய நடிகர் ரவி மோகன், மீண்டும் மற்றொரு படத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் படம் பென்ஸ். ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கிறார், பென்ஸ் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நிவின்பாலியை விட ஒரு வெயிட்டான வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் ரவி மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





