ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தை முதலில் இயக்கினார்.அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் முதல் படத்திலேயே அட்லீ ரிச்சான மேக்கிங்கை கொடுத்து அசத்திவிட்டார் என்று அவரை புகழ்ந்தார்கள். ஆனால் இந்தப் படத்தின் மௌன ராகம் வாடை அடிக்கிறதே என்ற விமர்சனத்தையும் வைத்தார்கள். இருந்தாலும் பரவாயில்லை முதல் படம்தானே அடுத்தடுத்த படங்களில் இந்த இயக்குநர் தனது தவறை திருத்திக்கொள்வார். இது எதார்த்தமாக நடந்திருக்கும் என கூறினர்.
இரண்டாவதாக விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்தப் படமும் மெகா ஹிட்டானது. ஆனா இந்தப் படமும் காப்பி என்ற ஜானருக்குள் வந்தது. அதாவது சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்றும்; படத்தின் ஒரு காட்சி அப்படியே பாட்ஷா படத்தின் காட்சியை சுட்டு வைத்திருக்கிறார் அட்லீ என்று பேச ஆரம்பித்தனர். அதேபோல் அடுத்து இயக்கிய மெர்சல் அபூர்வ சகோதரர்கள், பிகில் சக் தே இந்தியாவின் அடுத்தடுத்த வெர்ஷன்களாக உருவாகின.
இதனால் முதல் படத்தில் பாராட்டப்பட்ட அட்லீ நான்காவது படத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அதிலும் பிகில் படத்தின் ஆடியோ லான்ச்சில் அவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் அட்லீ கொஞ்சம் அகராதியாக பேசுகிறாரே என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். சூழல் இப்படி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார் அவர். படம் 660 கோடி ரூபாய் வசூலை குவித்திருக்கிறது.
இருந்தாலும் இந்தப் படமும் பல படங்களின் காப்பி என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி தன்னுடைய முந்தைய படங்களையே சுட்டு இதில் வைப்பதற்கெல்லாம் அட்லீக்கு தனி தைரியம் வேண்டும் என ஓபனாக கூறினர். இந்தச் சூழலில் அட்லீ மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அதுகுறித்து பேசிய அட்லீ, “நான் பார்க்கின்ற ஒவ்வொரு தமிழ் படமும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் கிரெடிட் கொடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 2,000 படங்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். படங்கள் மட்டுமின்றி பல விஷயங்கள் எனக்குள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு படத்துக்கு கிரெடிட் கொடுப்பது நமக்கு நம் மீது நம்பிக்கை இல்லாததைத்தான் உணர்த்தும். என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த கன்ட்டெண்ட் என்னுடையது என்று நம்புவேன். உணர்வேன்.” என்றார். அதேபோல் மற்றொருமுறை இதுகுறித்து பேசியிருந்த அட்லீ, 7 ஸ்வரங்களுக்குள்தான் ட்யூன் போட முடியும் என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





