கடந்த 15 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு புதிய திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனால் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் தான் அந்த படத்தை வெற்றி பெறச் செய்வார்கள். தன் உறவினர்கள் நண்பர்கள் பழகியவர்கள் என பலரிடமும் பேச்சுவாக்கில் அந்த படம் குறித்து பேசி, மற்றவர்களும் அந்த படம் பார்க்க செல்வார்கள்.
இப்படிதான் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன. இதுதவிர வார பத்திரிகைகள் தினசரி பத்திரிகைகளில் சினிமா விமர்சனங்கள் வெளியாவதும் உண்டு. ஆனால் அதற்கும் சில தினங்கள் ஆகும். அதனால் நட்சத்திர நடிகர் படம் என்றாலே ஒரு வாரம் 10 நாட்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் வந்துவிடும்.
தவிர டிவி செல்போன் இல்லாத காலகட்டத்தில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாக்கள்தான். அதனால் புதிய படங்கள் வந்தாலே இரண்டரை மணி நேரத்தை கழிக்க நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பலரும் சினிமா தியேட்டர்களுக்கு படையெடுப்பதும் வழக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது டிஜிட்டல் யுகத்தில் ஆண்ட்ராய்டு போன் புழக்கத்தில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ரிவ்யூ சொல்கின்றனர். சமூக வலைதளங்களில் அந்த படங்களை அக்குவேர் ஆணிவேராக விமர்சித்து விடுகின்றனர். ஓரிரு தினங்கள் கூட அந்த படங்கள் தியேட்டர்களில் ஓடுவதும் இல்லை. இதனால் பலத்த நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து நடப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சினிமா விமர்சனங்களுக்கு தடை போட கோரிக்கை விடுத்தது. அப்படி செய்ய முடியாது. விமர்சனம் செய்வதில் தலையிட முடியாது என்றும் கூறிவிட்டது.
இதற்கிடையே தேசிங்கு ராஜா 2 பட விழாவில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் மற்றும் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, ஆன்லைன் திரைப்பட ரிவ்யூவர்கள் ஒரு படத்தை பாராட்டினால் அவர்கள் வீடியோக்களை பார்க்க யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் சில டேக் லைன் வைத்து வீடியோக்கள் பதிவிடுகிறார்கள். உங்கள் ரிவ்யூக்களை 24 மணி நேரம் கழித்து போட்டால் ஒரு நாளாவது அந்த படம் ஓடும். படத்தை விமர்சியுங்கள். தனிப்பட்ட முறையில் விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





