நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றிப் படமாக இருந்தன. கடந்தாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படமும் கை கொடுக்காத நிலையில், அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள ரெட்ரோ படம் அதிக நம்பிக்கையை ரசிகர்களுக்கு தந்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரெட்ரோ படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் ஜனநாயகன் படங்களை தொடர்ந்து அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இதுதவிர ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். கூலி படத்திலும் ரஜினியுடன் ஒரு ஐட்டம் பாட்டுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார்.
மேலும் ரெட்ரோ படத்தில் ஜெயராம் நாசர் கருணாகரன் மற்றும் சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் 2 மணி 48 நிமிடங்கள் திரையில் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்து வருகிறது. இதில் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய 3 மொழிகளில் ரெட்ரோ படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரெட்ரோ படத்தில் ட்ரெய்லரில் நடிகர் சூர்யா வித்யாசமான கெட்டப்புகளில் வருகிறார். அவரது சண்டைக் காட்சிகளும் மற்ற நடிகர் நடிகைகள் பேசும் வசனங்களும் பெரிய அளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதிலும் நடிகர் சூர்யா, சிறப்பான தரமான சம்பவங்களை இனி நீங்க பார்ப்பீங்கடா என்று ஒரு காட்சியில் பேசியிருப்பது, இனி அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படும் படங்களாக இருக்கும் என்று அவர் சூசகமாக சொல்வது போல அமைந்திருப்பது, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





