சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மிகப் பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மோசமான திரைக்கதை மற்றும் தொய்வான இயக்கத்தின் காரணமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. அது மட்டுமல்லாமல் இணையதளங்களில் இந்த திரைப்படம் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது.
இந்த ஒரு திரைப்படத்திற்காக மட்டும் சூர்யா, ஓராண்டுக்கும் மேலாக செலவழித்தார். இப்படியான சூழலில் தான் தற்போது தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை வெற்றி படமாக கொடுக்க அவர் போராடி வருகிறார். இதில் சூர்யாவின் 44-வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ரெட்ரோ.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் மூலம் வெற்றியை பதிவு செய்த கார்த்திக் சுப்புராஜ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு ரெட்ரோ என பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் சூர்யா இரண்டு கெட்டப்களில் வருகிறார். ஒன்று தலையில் பங்க் வைத்துக் கொண்டு, அடர்ந்த மீசையுடன் அவர் காட்சி இருக்கிறார்.
ஆயுத எழுத்து படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் போன்றும் சூர்யாவின் ரோல் இடம் பெற்று இருக்கிறது. அந்தமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதனை படமாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். வெறும் நான்கு மாதங்களில் மட்டுமே இதன் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தின் டீசர் பலரையும் கவரும் வகையில் அமைந்தது. அதில் ரௌடியாக இருக்கும் சூர்யா தன் காதலியிடம் இனி சண்டைக்கு செல்ல மாட்டேன் என்பதை உறுதியுடன் கூறுவது போன்று காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் வெளியிடப் படக்குழு தயாராகி வருகிறது. அதில் முதலாவதாக காதலர் தினத்தன்று முதல் பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் சூர்யாவுடன் நடிகை ஸ்ரேயா நடனம் ஆடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





