மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிமிஷா சஜயன். தமிழ் சினிமாவில் சித்தார்த் நடித்த சித்தா என்ற படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது யதார்த்தமான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் அவர் துப்புரவு தொழிலாளியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களில் நிமிஷா சஜயன் நடித்தார். இப்போது அதர்வா ஹீரோவாக நடித்த சமீபத்தில் வெளியான டிஎன்ஏ என்ற படத்தில் அவரது மனைவியாக நிமிஷா சஜயன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நிமிஷா சஜயன் கூறியதாவது, மலையாளத்தில் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியம் என்பது நான் நடித்த முதல் படம். அந்த படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. அந்த படம் வெளியான பிறகு பலரும் என்னை பாராட்டினார்கள். நானும் ஹீரோயின் ஆகி விட்டேன் என்று சந்தோஷமாக இருந்தது.
விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது கிடையாது. என்னை பொருத்தவரை நல்ல விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன். மற்றபடி என்னை நோக்கி வரும் மோசமான விமர்சனங்களை நான் கண்டு கொள்வதே இல்லை. என் திறமையை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் பாராட்டுக்களையும் நான் அடையும் மிகப்பெரும் விருதுகள் என்று எண்ணிக் கொள்கிறேன். இவர் ஒரு நல்ல நடிகை என்று என்னை பாராட்டுகிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும். மக்கள் விரும்பும் ஒருவராக அவர்கள் உள்ளத்தில் இடம் பிடிப்பவராக இருக்க ஆசைப்படுகிறேன்.
டிஎன்ஏ படத்தில் எனக்கு அம்மா கதாபாத்திரம். ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே கதைக்கு ஏற்றபடி என்னை தயார் படுத்திக் கொண்டேன். அதற்கான எமோஷனலை நானே எனக்குள் ஏற்படுத்திக் கொண்டேன். நடிப்பு என்பது தவம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் என்னை வருத்திக்கொண்டு உழைக்க தயார். டிஎன்ஏ படத்தில் என் நடிப்பு சிறப்பாக இருப்பதாக அனைவரும் பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றி அடைவது பெரிய விஷயம் இல்லை. சின்ன பட்ஜெட் படங்கள் தான் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் டைரக்டர்களின் நடிகை என்று என்னை அழைப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்ல கதைகள் எதையும் நான் விட்டதே இல்லை. என் மனதை தாக்கும் கதைகளை உடனடியாக ஓகே செய்து விடுகிறேன். இப்போது 3 படங்களில் நான் நடித்து வருகிறேன் என்று நடிகை நிமிஷா சஜயன் கூறியிருக்கிறார்.





