தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக, இயக்குனராக ஆர்ஜே பாலாஜி வலம் வருகிறார். ரேடியோ ஜாக்கியான அவர், ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். நான் ஸ்டாப் ஆக அவர் பேசுவதை ரசிப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காமெடி நடிகராக சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
எல்கேஜி படத்தில் நாயகனாக நடித்த அவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படம் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி ஊர்வசி மௌலி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி இருந்தார், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகிறது. ஆனால் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. ஆனால் மாசாணி அம்மன் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர், நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறுகையில், நான் மூக்குத்தி அம்மன் 2 இயக்க ஆர்வம் காட்டவில்லை. அவங்க அதை பண்ற ஐடியாவில் இருக்காங்க. எனக்கு அந்த ஐடியா இல்லை. அதனால் வேறு இயக்குனரை வைத்து பண்றாங்க. மூக்குத்தி அம்மன் இல்லை என்றால் நான் வேறு ஏதாவது ஒரு படம் பண்ணிக்கிறேன். அது ஒண்ணும் டைட்டானிக் இல்லை.
மூக்குத்தி அம்மன் இல்லைன்னா மாசாணியம்மன், அதுவும் இல்லைனா இன்னும் 108 அம்மன் பெயர்கள் இருக்கு. அதில் ஒன்றை இயக்குவேன். நான் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் எழுதிய கதை மூலமாக நடிகர் சூர்யாவை இயக்கம் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார். மூக்குத்தி அம்மன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், நடிப்பில் வெளியான ஒரு வெற்றிப்படம் என்று நிலையில், அது ஒண்ணும் டைட்டானிக் இல்லை என்று அவரே விமர்சித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





